என்னுடைய வலைப்பூ ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடங்கள்
நிறைவுற்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இது என்னுடைய 250வது பதிவும்
கூட…. நான்கு வருடங்களில் 250 என்பது மிகவும் குறைவு என்றாலும், மனதுக்கு திருப்தியாக,
என் மனதின் வெளிப்பாடாக, நட்புகளிடம் மனம் விட்டு பேசியது போன்ற உணர்வுடன் அமைந்த பதிவுகள்
அவை.
2010 ஆகஸ்டு 10ந்தேதி என்னவர் எனக்கு வலைப்பூவை துவக்கி
கொடுத்து முதல் பதிவை அவரே டைப் பண்ணித் தந்து உதவினார். அது முதல் அவ்வப்போது பதிவுகளை
எழுதி வருகிறேன். முதலில் சில மாதங்கள் மிகவும் சிரமப்பட்டு தான் டைப் பண்ணி கற்றுக்
கொண்டேன். சமையல் குறிப்புகள், பயணத்தொடர்கள், அனுபவங்கள், நினைவுகள், திருவரங்கத்து
உற்சவங்கள், பண்டிகைகள், புத்தக அறிமுகங்கள் என சில பிரிவுகளில் எழுதி வந்திருக்கிறேன்.
இரண்டு முறை வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை பெற்றுள்ளேன்.
நட்புகள் பலரால் நிறைய முறை வலைச்சரத்தில் அறிமுகமும் ஆகியுள்ளேன். தொடர்ந்து ஆதரவு
தந்து கொண்டிருக்கும் நட்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. உங்களின் ஆதரவு தொடர்ந்து
கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பதிவுலகில் உலா வருவேன்.
என் வலைப்பூவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வந்த உங்களுக்கு
இனிப்பில்லாமலா! ஸ்வீட் எடுங்க…. நட்புகளே. இது நானே செய்த இனிப்பு தான். அதனால் தாரளமாக
எடுத்துக்கோங்க…
திருமதி மல்லிகா பத்ரிநாத் அவர்களின் குறிப்புடன் கொஞ்சம்
மாறுதல்களோடு செய்த மைசூர் பாகு….. குறிப்பு இதோ..
மைசூர் பாகு!
தேவையான பொருட்கள்:-
கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 2 கப்
தண்ணீர் – ½ கப்
நெய் – 1½ கப்
செய்முறை –
கடலை மாவை வெறும் வாணலியில் சற்று வறுத்துக் கொள்ளவும்.
அடுத்து வாணலியில் சர்க்கரையும், தண்ணீரையும் சேர்த்து சூடாக்கவும். அருகில் ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாக்கவும். சர்க்கரை உருகி
கொதிக்க ஆரம்பித்ததும், ஒரு கிண்ணத்தில் தண்ணீர் விட்டு வைக்கவும். கொதிக்க ஆரம்பித்த
பாகை தண்ணீரில் விட்டு பார்த்தால் பாகு உருட்ட வர வேண்டும். இப்போ கடலைமாவை கொஞ்சம்
கொஞ்சமாக தூவ வேண்டும். பாகுடன் மாவு சேர்ந்து வந்ததும், நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு
கைவிடாமல் கிளற வேண்டும். நெய் முழுமையாக உறிஞ்சப்பட்டு வாணலியில் ஓரங்களில் நுரை போல
பூத்து வரும். இப்போ அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி,
கொஞ்சம் ஆறியதும் வில்லைகள் போடவும்.
வாயில் போட்டால் கரையும் மைசூர் பாக் தயார்.
மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்
திருவரங்கம்.