முள்ளங்கி வாங்கும் போது அதன் கீரையுடன் நான் தமிழகத்தில் பார்த்ததில்லை. தில்லிக்கு சென்ற பின் தான் அதன் கீரையை பற்றி தெரிந்து கொண்டேன். குளிர்காலத்தில் கிடைக்கும் முள்ளங்கி வெள்ளை வெளேரென, நல்ல நீளத்துடன், தடிமனாக காணப்படும். பார்க்கவே வாங்கத் தூண்டும். நான் அங்கு இருந்தவரை கிலோவே 5 ரூபாய்க்கு மேல் வாங்கியதே இல்லை. அங்கு முள்ளங்கியை பச்சையாக சாலட்டாகத் தான் சாப்பிடுவார்கள். அல்லது ”மூலி பராட்டா” செய்து சாப்பிடுவார்கள்.
அதனுடன் பச்சை பசேலென அந்த கீரையை பெரும்பாலானவர்கள் அங்கேயே ஒடித்து போட்டு விடுவார்கள். மலை போல் குவிந்திருக்கும் அந்த கீரையை ஆட்டுக்கு தான் கொடுப்பார்கள். என்னவர் காய் வாங்கச் சென்றாலும் கூட ஒடித்து அங்கேயே போட்டு விட்டு வந்து கொண்டிருந்தார்.
என் மாமியார் தான் என்னிடம் அந்த கீரையில் சப்ஜி செய்யலாம் எனச் சொல்ல, அன்று முதல் கீரையை வாங்கிக் கொண்டு வரத் துவங்கினேன். சப்ஜி செய்து சப்பாத்தியுடன் அலுவலகத்துக்கு கொடுத்து விடுவேன். உடன் சாப்பிடுபவர்களும் நன்றாக இருப்பதாக சொல்லியுள்ளார்கள்…..:) இந்த கதையெல்லாம் தில்லியோடு சரி! ஆனால் சமீபத்தில் ஒரு நாள் காலை வேளையில் பக்கத்து வீட்டில் இந்த கீரையை எடுத்து வந்து காண்பித்து இது என்னங்க கீரை? இதை சாப்பிடலாம் என்று சொல்லி தெரிந்தவங்க கொடுத்துட்டு போனாங்க…. எப்படி செய்யறதுன்னு தெரியலை என்றார்கள்…
ஆஹா! இது முள்ளங்கியின் கீரை. இதை சப்ஜி செய்து சாப்பிடலாம் என்று சொல்லி ரெசிபி சொன்னேன். உடனே நீங்களும் கொஞ்சம் எடுத்துக்கோங்க என்று தந்தார்கள். உடனேயே செய்து விட்டேன். நீங்களும் எப்படி என்று தெரிந்து கொள்ள வாருங்கள். கொஞ்சம் முன்கதை தான் பெரிதாகி விட்டது. பரவாயில்லை! இதெல்லாம் அப்புறம்எப்ப உங்களிடம் பகிர்ந்து கொள்வது….:)))
தேவையானப் பொருட்கள்:-
முள்ளங்கி கீரை – சின்ன கட்டு அளவு
வெங்காயம் – 2
தக்காளி – 2
பயத்தம்பருப்பு – கைப்பிடி அளவு
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
கரம் மசாலா – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
கீரையை தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பயத்தம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காயவைத்து சீரகத்தை பொரிய விடவும். அடுத்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். தக்காளியை சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து பிரட்டி, தண்னீர் தெளித்து மூடி வைக்கவும். கீரை நன்றாக வெந்ததும், வேகவைத்துள்ள பயத்தம்பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
முள்ளங்கி கீரை சப்ஜி தயார். சாதத்துடனும், சப்பாத்தியுடனும் பரிமாறலாம். சுவையானதும், சத்தானதும் கூட… என்ன உங்க வீட்டிலும் கீரை கிடைத்தால் செய்து பார்ப்பீர்கள் தானே..
மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்
திருவரங்கம்.
பின் குறிப்பு:-
கரம் மசாலா விருப்பம் தான். தேவையில்லையெனில் விட்டு விடலாம்..
பருப்புடன், கீரையும் குக்கரில் வைத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.