வலையுலகில் தொடர்பதிவு என்பது நல்லதொரு விஷயம். ஒரு விஷயம் பற்றி நாம் எழுதுவது மட்டுமல்லாது வேறு சிலரையும் அதே விஷயத்தினைப் பற்றி எழுதச் சொல்லும்போது ஒரே விஷயத்தின் பல பரிமாணங்கள் நமக்குப் புலப்படுகின்றன.
முத்துலெட்சுமி என்னையும் "மூன்று" தொடர்பதிவினைத் தொடரும்படி கேட்டுக்கொண்டதற்கும் [சாட்டிங் மூலம்], திரு வை. கோபாலகிருஷ்ணன் அவரது மூன்று பதிவில் அழைத்தமைக்கும் உடன்பட்டு, நானும் இந்த தொடர்பதிவினைத் தொடர்கிறேன்.
1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
- பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து முகத்தினைத் தென்றல் காற்று வருட, காதினில் தேனாய் விரும்பிய பாடல் கேட்ட படி செல்லும் பயணம்.
- சிலுசிலுவென காற்றுடன் பெய்யும் மழையில் நனைவது.
- ஜாதிமல்லி மொட்டாய் வாங்கி அடர்த்தியாகக் கட்டி, தலை முழுவதும் சூடிக்கொள்ள வேண்டும். [”சாதா மல்லிகைக்கே வழியில்லையாம்….. இதுல இந்த தில்லியில் ஜாதிமல்லி வேறா” – நிஜமாகவே என் மைண்ட்வாய்ஸ் இல்லை]
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
- தனக்கு வசதி என்பதால் குழந்தைகளுக்குத் துரித உணவுகளான நூடுல்ஸ் போன்றவற்றை அளிப்பது.
- தேவையில்லாத ஆடம்பரம்.
- அளவுக்கு அதிகமான, பயமுறுத்தும் அலங்காரம்!
3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
தெனாலி கமலஹாசன் மாதிரி பெரிய அட்டவணையே இருக்கு…. எதைச்சொல்ல? எதை விட?
- பல்லி [என்னைப் பார்த்து பயந்த பல்லி, தனது வாலை விட்டுவிட, துடித்துக் கொண்டு இருக்கும் பல்லி வாலைப் பார்த்து அலறிய சத்தத்தில் மொத்த கட்டடமும் வீட்டு வாசலில்…].
- இருட்டு.
- ”பேய் இருக்கா? இல்லையா?” என்ற விவாதமே இல்லை மனதுள். யாராவது ”பே” என்று ஆரம்பித்தாலே பயந்து விடுவேன்.
4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
- நன்கு பழகிய நண்பர்களே சில சமயங்களில் நம்மை ஏமாற்றுவது.
- பான்பராக், பீடா போடுபவர்களுக்கு, நடு ரோடில் சென்று கொண்டிருக்கும் போதுதான் துப்பத் தோன்றுமா? தில்லி சாலை முழுதும் இவர்கள் துப்பித் துப்பியே சிவப்புக் கறை :(
- சிலருக்கு அலைபேசியில் பேச அப்படி என்னதான் விஷயம் இருக்கும் – மணிக்கணக்கில் பேசுகிறார்களே!
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
- இரண்டு சிறிய பூந்தொட்டிகள்.
- பதிவர் புதுகைத் தென்றல் தில்லி விஜயத்தின் போது அளித்த ஒரு அழகிய பிள்ளையார் பொம்மை.
- என்னவருக்கு டீக்கடைச்சூரியன் புத்தகம் என்றால் எனக்கு என். சொக்கன் அவர்கள் எழுதிய “வைட்டமின்கள் – அத்தியாவசியத் தேவை” புத்தகம்.
6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
- சில T.P.T மனிதர்கள்…. [அது சரி T.P.T என்றால் என்ன எனக் கேட்பவர்களுக்கு “தற் பெருமை தக்காளி”.
- எங்கள் வீட்டின் பக்கத்தில் இருந்த “வன்ட்டு மாமா”! ஒரு வாக்கியம் பேசச் சொன்னால், அந்த வாக்கியம் முடிவதற்குள் பத்து முறையாவது ”வன்ட்டு” சேர்த்து அவர் பேசும் விதம். அவரைப் பற்றித் தனியாகவே ஒரு பதிவு போடலாம். அந்த அளவுக்கு சரக்கு இருக்கிறது அவரிடம்!
- டப்பர்வேர் மாமி – ”இடம் பொருள் ஏவல்” என்பதில்லாமல் எந்த இடத்தில் பார்த்தாலும் பார்த்தவர் தலையில் “டப்பர்வேர்” டப்பாக்களை கட்டிவிடும் திறனால், அவற்றினை வாங்கியவர்களைப் பார்க்கும்போது…. ஹிஹிஹி… தான் [நான் இன்னும் அவரிடம் மாட்டவில்லை என்பதாலும்]
7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
- சற்றே உடல்நிலை சரியில்லாததால் முடிந்த அளவிற்கு ஓய்வு [அப்புறம் எப்படி இந்த தொடர்பதிவு என்றால் – ஓய்வு முடிந்த அளவிற்கு என்று முதலிலேயே சொல்லி விட்டேனே…..]
- படிக்க விட்டுப்போன சில வாரப் பத்திரிகைகள் படித்துக் கொண்டு இருக்கிறேன் [சில சற்றே அரதப் பழசு என்றபோதும்….]
- மனதை ஒரு முகப்படுத்தவும், அமைதிக்காகவும் சில நாட்களாக இரண்டு பக்கங்களாவது “ராம, ராம” எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
- திருமணத்திற்கு முன் தமிழகம் தாண்டியதில்லை…. அதனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் பயணம் செய்ய வேண்டும்.
- வாசலில் திண்ணையுடனும், வீட்டுக் கூடத்தில் ஊஞ்சலுடனும், தோட்டத்தில் பூச்செடிகளுடனும் கூடிய அமைதியான, விஸ்தாரமான வீடு, அதுவும் என் தமிழ்த் திருநாட்டில்.
- என் அம்மா, அப்பா நினைவாக, அவர்களது பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து ஆதரவில்லாத வயதானவர்களுக்கென ஒரு இல்லமோ, அல்லது உதவிகளோ செய்வது.
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
- விட்டுப்போன யோகாசனப் பயிற்சியை மீண்டும் ஆரம்பிப்பது.
- ஓவியம் வரைதல் [படித்த காலத்தில் வரைந்து கொண்டு இருந்தேன் – இப்போது வரைதல் பற்றிய நினைவு கூட வருவதில்லை]
- மகளுக்கு தமிழ் பயிற்றுவித்தல்.
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
- சாலையில் செல்லும்போது வாகனங்களில் அலற வைக்கும் ஸ்டீரியோ ஒலி.
- அடுத்தவர்கள் பற்றிய வம்பு செய்திகள்.
- ”அது சரியில்லை, இது சரியில்லை, இது வேண்டும், அது வேண்டும்” என்பது போன்ற புலம்பல்கள்.
11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
- பாரம்பரியமான உணவு வகைகளில் மேலும் பல செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.
- தையல் [குறைந்த பட்சம் என்னுடைய உடைகளையாவது நானே தைக்கும் அளவுக்கு) என் மாமியாரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
- தேவையில்லாத பொருட்களைக் கொண்டு கலைநயமான பொருட்கள் தயாரித்தல்.
12) பிடிச்ச மூன்று உணவு வகை?
- எல்லா வித இனிப்பு உணவும் பிடிக்கும் என்றாலும் மிகவும் பிடித்தது பாதுஷா.
- அம்மா வைத்துத் தந்த பருப்பு உருண்டைக் குழம்பு [எத்தனை முறை முயன்றாலும் அம்மாவின் கைமணம் வருவதில்லை :( ]
- எனது பாட்டி, திருகையில் அரைத்துச் செய்து தந்த புளிப்பொங்கல், அப்பளம் மற்றும் வெங்காயம் சேர்த்த தயிர் பச்சடியுடன்.
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
நான் முணுமுணுக்கும் இந்தப் பாடல்களை நீங்களும் ரசிக்க, சுட்டியை அழுத்துங்களேன்….
14) பிடித்த மூன்று படங்கள்?
- மகளிர் மட்டும்
- உன்னால் முடியும் தம்பி
- குடும்பம் ஒரு கதம்பம்
15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?
- நண்பர்கள்
- உறவினர்கள்
- சுவாசம்
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்….
ஆதி வெங்கட்.