Pages

Monday, April 30, 2012

ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா




தலைப்பை பார்த்ததுமே புரிந்திருக்குமே உங்களுக்கு. ஆமாங்க நான் ஹிந்தி கற்றுக் கொண்ட அனுபவங்களை, அந்த சோகக் கதையை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். என் மீண்டும் பள்ளிக்கு போகலாம் தொடர்பதிவில் சொன்னது போலவே ஆறாம் வகுப்பு ஆரம்பத்திலேயே எங்க வீட்டுக்கு மேல் வீட்டில் உள்ள ஒரு ஹிந்தி கற்பிப்பவரிடம் என்னை முதல் தேர்வான ”பிராத்மிக்” (PRATHMIC) சேர்த்து விட்டார் என் அம்மா.

அதிலிருந்து ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு தேர்வாக எழுதித் தேறிக் கொண்டிருந்தேன். காலையில் ஆறு மணிக்கு எழுந்து மேல் வீட்டு டீச்சரிடம் கற்றுக் கொள்ள செல்ல வேண்டும். இதுவே எரிச்சல் என்றால், தப்பாக எழுதினாலோ இல்லை தெரியவில்லை என்றாலோ முட்டி போடச் சொல்வார் அந்த ஆசிரியர். இது பெரிய எரிச்சல். பள்ளிப்படிப்பு தவிர கூடுதலாக படிக்கும் இதிலும் முட்டி போடச் சொல்வது பெரிய கொடுமை… (நீங்க என்ன சொல்றீங்க?)

அந்த ஆசிரியர் அருகிலேயே மர ஸ்கேல் அல்லது குச்சி (எதுக்கா? அடிக்கத் தான்...) வைத்திருப்பார். இதனுடன் ஹிந்தி தமிழ் டிக்‌ஷனரி. ஆமாங்க முக்கால் வாசி நேரம் இதைப் பார்த்து தான் அர்த்தம் சொல்வார். ஏனோ இந்த முட்டி போடுதல், அடி வாங்குவது, எதற்கெடுத்தாலும் டிக்‌ஷனரியை பார்த்து சொல்லுதல் இந்த காரணத்தினாலேயே ஹிந்தியே பிடிக்கவில்லை. அம்மாவிடம் சொன்னாலும் மேல் வீடு தான் அருகில் இருக்கிறது என்பதால் வேறு எங்கும் அனுப்பவில்லை.

பரீட்சைக்கு முன்னர் இருமுறை ஏதாவது பள்ளிகளில் செமினார் வைப்பாங்க. அப்பா அழைத்துச் சென்று விட்டு விட்டு இருந்து மாலையில் அழைத்து வருவார். முதல் பரீட்சையன்று தேர்வு எழுதும் செண்டருக்கு சென்றதும் பயமாகி விட்டது. காரணம் அங்கு சிறியவர்கள் முதல் 60 வயது பெரியவர்கள் வரை தேர்வு எழுதுவதைக் கண்டதும் எனக்குள் என்னவோ செய்தது. கிடுகிடுவென்று தேர்வினை எழுதி விட்டு வந்து விட்டேன். வரும் வழியில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பயத்தில் வாந்தியே எடுத்து விட்டேன். அன்று செளசெள (என்ர ஊர்ல மேரக்காய்) கூட்டு சாப்பிட்டிருந்தேன். அன்று முதல் பல வருடங்களுக்கு செளசெளவே சாப்பிடாமல் இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மதிப்பெண் எவ்வளவு என்றெல்லாம் கேட்கக் கூடாது ஜஸ்ட் பாஸ். போதாதா?...

அடுத்து மத்யமா, ராஷ்ட்ரபாஷா என்ற இரு தேர்வுகளையும் எப்படியோ படித்து தேறி விட்டேன். அதற்கடுத்த நான்காம் தேர்வான பிரவேசிகாவில் ஒருமுறை தோற்று விடாப்பிடியாக (வீட்டில் விடவில்லை) படித்து மீண்டும் எழுதி தேறினேன். அதோடு எங்க மேல் வீட்டு டீச்சரும் வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஏரியாவுக்கு போயிட்டாங்க. ”அப்பாடா! தப்பித்தேனா…” என்றால் இல்லையே…

அடுத்த தேர்வான விஷாரத்தில் இரண்டு பிரிவுத் தேர்வு (பூர்வாத், உத்தராத்) இது டிகிரிக்கு ஈடானது. இதை கற்றுக் கொள்ள டவுன் ஹாலில் ”அஞ்சு முக்கு” என்றொரு பிரபலமான இடம் உண்டு. விஜயா பதிப்பகம், நேந்திரம் சிப்ஸ்களின் மணம் என்று பல விஷயங்கள் உண்டு இந்த இடத்தில். என் அப்பாவின் அலுவலகத்தின் அருகில் தான் உள்ளது இந்த இடம். இங்கு சக்தி ஹிந்தி செண்டர் என்ற இடத்தில் என்னை சேர்த்து விட்டார் அப்பா. இங்கு நிறைய பேர் அவரவர்களின் நேரத்திற்கு தகுந்த படி கற்றுக் கொள்ள வருவார்கள்.

பள்ளியிலிருந்து மாலை வந்ததும் கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாகி பேருந்தை பிடித்து 20 நிமிட பயணத்தில் அப்பாவின் அலுவலகம் சென்று விட்டு (எதற்கா? அப்போ தானே எதிர்த்தாற் போல் உள்ள அரோமா பேக்கரியில் ஏதாவது சாப்பிட வாங்கித் தருவார்) அங்கிருந்து இந்த செண்டருக்கு செல்வேன். இங்கு வருபவர்களில் நான் தான் பள்ளி மாணவி. மற்றவர்கள் டிகிரி முடித்து விட்டு வீட்டிலிருப்பவர்கள். அல்லது வேலைக்கு செல்ல முயற்சி செய்பவர்கள். இந்த டீச்சர் நல்லபடியாக சொல்லித் தந்தார். தேர்வும் எழுதி முதல் பிரிவான பூர்வாத்தை தேறினேன்.

அடுத்த பிரிவான உத்தராத்துக்கு தான் திண்டாட்டமாகி விட்டது. நானும் ஒன்பதாம் வகுப்புக்கு சென்றிருந்தேன். பள்ளி நேரத்தையும் ஷிப்ட் முறையில் மாற்றியதால் மாலை 5.30க்கு தான் வீட்டுக்கு வருவேன். அதற்கப்புறம் ஹிந்தி வகுப்புக்கு செல்வது கஷ்டமாகி விட்டது. (இருட்டிய பிறகு வெளியே அனுப்ப மாட்டார்கள் அல்லவா…) சில நாட்கள் காலையில் சென்டருக்கு சென்று வருவேன். அதற்கு பிறகு ஆர்.எஸ் புரத்தில் சில நாள், இப்படி எப்படியோ நானே படித்து இரண்டாம் பிரிவையும் தேறி விட்டேன். இந்த விஷாரத் இரு பிரிவுகளையும் முடித்தவுடன் திருச்சியில் பட்டமளிப்பு விழா வைத்திருந்தார்கள். மூப்பனார் அவர்களின் கையால் வாங்க வேண்டிய சான்றிதழை திருச்சிக்கு செல்ல முடியாத காரணத்தால் தபாலில் பெற்றுக் கொண்டேன்.

இதன் கூடவே DIRECTORATE OF HINDI EDUCATION, DELHI (அப்பவே தில்லியோடு தொடர்பு வந்திடுச்சு பாருங்க.) யிலிருந்து ஆறு மாத டிப்ளமோ கரஸ்ஸில் பண்ணலாம் என்று சேரச் சொன்னாங்க. அதையும் சேர்ந்து தான் வைப்போமே என்று சேர்ந்தாச்சு. அப்பப்போ பாடங்கள் வரும். பேப்பர்ஸும் பூர்த்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்தேன். செமினார்கள் இருக்கும். கேந்திரிய வித்யாலயாவில் தேர்வு எழுதினேன். எல்லோரும் பெரியவர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த தேர்வு எழுதி தேறினால் INCREMENT  கிடைக்குமாம்.

என் பின்னால் இருந்த ஒருவர் நான் எழுதிய விடைத்தாளை காண்பிக்கும்படிச் சொல்ல, பயந்து போய் என் விடைத் தாளையே எடுத்து கொடுத்து விட்டேன். (கொடுக்காம போனா வெளில வந்து அடிச்சுடுவாங்களோ என்ற பயம் தான்) அவரும் எழுதி விட்டு மரியாதையாக கொடுத்து விட்டார். அந்த டிப்ளமோவையும் முதல் வகுப்பில் தேறி விட்டேன்.

இப்போ நான் பத்தாவது வந்திருந்ததால் அதை காரணம் காட்டி அடுத்த தேர்வான ப்ரவீன் பண்ண முடியாது என்று சொல்லி வீட்டில் தப்பி விட்டேன். நான் D.M.E பண்ணிய பிறகு கூட அப்பா எவ்வளவோ தடவை சொல்லியும் நான் கேட்கவில்லை முடியாது என்று சொல்லி விட்டேன். ஒவ்வொரு தேர்வின் போதும் அங்கிருப்பவர்களை பார்த்தால் எல்லோரும் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருப்பார்கள். அதைப் பார்த்தாலே வயிற்றை கலக்க ஆரம்பித்து விடும். ஹிந்தி இலக்கணம் இருக்கே… அப்பப்பா...

சரி இவ்வளவு படித்து என்ன பயனடைந்தேன் என்கிறீர்களா?...

திருமணம் முடிந்து தில்லி வந்து இறங்கியதிலிருந்து இப்போ வரை ஹிந்தியில் எழுதிய எந்த பெயர்ப் பலகையையும் உடனே படித்து விடுவேன். வேறு எதற்கும் உபயோகமாக வில்லை. பேச்சு வழக்கு என்பது நாளாக ஆகத் தான் வந்தது. பல மாநிலத்தவர்கள் இங்கிருப்பதால் ஒவ்வொருவரின் ஸ்டைலில் அவர்கள் பேசும் ஹிந்தியை புரிந்து கொள்வதற்கே நாளானது.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி 1: இது என்னுடைய 100வது பதிவு. எப்படியோ திக்கித் திணறி நூறு பதிவுகள் எழுதி விட்டேன். எனக்கே ஆச்சரியமாகத் தான் இருக்கு. தொடர்ந்து எனது பதிவுகளுக்கு ஆதரவு தந்த/தரும் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.


டிஸ்கி 2: என் வலைப்பூவில் சில நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தமிழகத்துக்கு வருகை. அதனால எல்லோரும் விடுமுறையை எஞ்சாய் பண்ணுங்கபைபை.